Tuesday 29 March 2016

பொம்மை கல்யாணம்

வாசலில் வந்திறிங்கிய முதல் என்னை பார்த்து சிரித்து கொண்டே இருந்தாள் அவள் .பொம்மைக்கு புடவை கட்டியது போல .நாம் பார்க்கும் பேஷன்ட் போல தெரியவில்லையே ,எதற்கு நம்மை பார்த்து இத்தனை வாஞ்சையாய் சிரிக்கிறாள் என்று சிறிது யோசித்துவிட்டு வேறு பேஷன்ட்டுகளை பார்ப்பதில் மூழ்கிப்  போனேன் .

சிறிது  நேரத்தில் நான்  வழக்கமாக பார்க்கும் சிறுமியின் பைலை கொண்டு வந்து தரவும் பளிச்சென்று நினைவுக்கு வந்தது ,இவள் தான் அவள் என .பார்த்து இரண்டு மூன்று வருடம் ஆகியிருக்கலாம் ..சுரிதாரோ பாவாடை சட்டையோ அணிந்திருப்பாள் .எப்போதும் வளையல் கம்மல் எல்லாம் மேட்சாக இருக்கும்.

 அம்மாவுடன் வருடம் ஒருமுறை விடுமுறையின் போது மட்டும் வருவாள் . ஏதோ ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டு இருந்தாள் .இவள் அம்மா ஒரு இளம் விதவை .அவள் அம்மா ஆதரவில் இருந்தாள் .மாத வருமானம் அதிக பட்சம் 5000 இருக்கலாம் .

உள்ளே வந்தாள் .பார்க்க அழகாகவும் சிரிப்பாகவும் இருந்தது .
என்ன பொடவ  கட்டியிருக்க ?
கல்யாணம் ஆயிருச்சு .
கல்யாணம் ஆயிருச்சா ?எப்ப ?
ஆறு மாசமாச்சு .
என்ன வயசு ஒனக்கு ?
பதினஞ்சு
ஒங்கம்மா ஒண்ணும் சொல்லலையே ?
ம்ம் ..நீங்க திட்டுவீங்கன்னு சொல்லல
மாப்பிள்ள ?
இங்க தான் அவரும் ட்ரீட்மென்ட் எடுக்குறாரு ...பைலை வாங்கி பார்த்தால் மாப்பிள்ளை வயது முப்பத்தெட்டு .
கூட்டிட்டு  வரவா ?உங்ககிட்ட பேசணுமாம் ..
குழந்தை பெத்துக்கணும்ன்னு  கேக்குறாங்க -
அதெல்லாம் ரொம்ப சின்ன பொண்ணு ,இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகணும் என்று அதட்டிய என்னை கோபமாக பார்த்துவிட்டு வெளியே சென்றான் .
ஒங்கம்மா வரட்டும் பேசிக்கிறேன் .

இன்று வந்தாள் அவள் அம்மா .பொல பொலவென்று அழ ஆரம்பித்தாள் .அவங்க வீட்ல ரெண்டு வருஷமா இந்த பொண்ண கேட்டுட்டே இருக்காங்க .வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டே சமாளிச்சு,இப்ப ஊர்க்காரங்க எல்லாருமா சேந்து ,கட்டாயமா கோயிலுக்கு போன எடத்துல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க .கல்யாணம் பண்ணிட்டா  அந்த பொண்ண நல்லாவே வச்சுக்கல ,என்னன்னு கேக்க  போன என்ன அடிச்சு வெரட்டீட்டங்க .எங்க அம்மாவும் செத்து போச்சு ,அண்ணன் தம்பியும் பேசுறதில்ல .என்னன்னு கேக்குறதுக்கு யாருமில்ல .இப்ப சொத்தும் இல்லன்னு சொல்லிட்டாங்க .பொழைக்க வெளியூர் போயிருக்காங்க .எம்புள்ளைய எங்கிட்ட பேச விடுறதில்ல .ஒங்ககிட்ட பேசுனா நா கேட்டேன்னு சொல்லுங்க .கொழந்த மட்டும் வேண்டாம்ன்னு சொல்லுங்கம்மா .நானும் என் புள்ளையும் இந்த நோய வச்சுட்டு படுற கஷ்டம் போதும் .இவ ஒரு கொழந்த பெத்தா அத பாக்குறதுக்கு எனக்கு தெம்பும் இல்ல எம்புள்ளைக்கு வயசும் இல்ல ....