Tuesday 28 October 2014

யாகாவாராயினும் நா காக்க ...

வழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார்  .வயது 70.எப்பொழுதும் அவருடன் அவர்  இளைய மகன் வருவார் .இன்று   புதிதாக இன்னொருவரும்  வந்திருந்தார் .தம்பி போலும் என  நினைத்துக்கொண்டேன் .முதலில் உள்ளே வரவில்லை .Viral load  test  செய்ய வேண்டும் ,இரண்டாயிரம் ரூபாய் ஆகும் இன்று  செய்து கொள்கிறீர்களா அடுத்த முறை செய்து கொள்கிறீர்களா என்று கேட்டு கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தார் .

"என்ன ?" என்று மகனை பார்த்து   கேட்கவும் ,"நீங்க யாரு ?"என்றேன் நான் ."அவங்க மகன் தான் " என்றார் ."நா பாத்ததே இல்லையே ?" என்றவுடன் ."நீங்க எங்கம்மாவுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க .வேல கீல செய்யாம கெடக்க சொல்லுங்க .நா மாசாமாசம் மாத்திரைக்கு செக் போட்டு கொடுக்குறேன் .அப்புறம் என்ன கேடு ?பதிமூணு  மாசத்துக்கு இப்பவே செக் கொடுத்துட்டேன் .இன்னும் என்ன எப்படி தேய்க்கலாம்ன்னு தான் பாக்குறாங்க ."அவர் உடனே ,"நீ செய்யலைன்னு நா சொல்லலையே தம்பி ?வாடகைக்கு கொஞ்சம் பணம் கொடுன்னு தானே சொல்றேன் .""ஒனக்கே எல்லாத்தையும் அழுதுட்டா ,நா ரெண்டு பொண்ணு பெத்துருக்கேன் . அதுங்களுக்கு கார் பங்களா கொடுத்து கட்டி கொடுக்க வேணாமா ?வரவன் ஒசியிலையா கட்டிக்க போறான் ?"


"ஒங்க  பொண்ணுக்கு பங்களா கொடுக்கணும்ன்னு சொல்றீங்க ,ஒங்கம்மாவுக்கு வாடகை கொடுக்கறதுக்கு இவ்வளவு பேசுறீங்க ?
"நா நெறைய படிச்சிருக்கேன் ."
"ஒங்கம்மா தானே படிக்க வச்சாங்க ?"
"ஆமா இவங்க தான் வந்து எக்ஸாம் எழுதுனாங்க "
"அவங்க அறிவு தானே உங்களுக்கும்  இருக்கும் ?"
"இப்ப கூட வந்திருக்கேன் ,பொழப்ப விட்டுட்டு ...நீங்க என்ன டெஸ்ட் வேணுமோ பண்ணிக்கோங்க "
"ஒங்கம்மாவுக்கு தானே கொடுக்கிறீங்க ?ஏன் கொடுத்தேன் கொடுத்தேன்னு கணக்கு சொல்லிகிட்டே இருக்கீங்க ?இத்தன வருஷத்துல இன்னைக்கு தான வந்திருக்கீங்க ?எப்பவும் ஒங்க தம்பி தான வருவாரு ?
"அந்த பொறுக்கி பயல கட்டிட்டு அழுறாங்க .அவன ஏதாவது செஞ்சு பிழைக்கட்டும்ன்னு மெட்ராசுக்கு அனுப்ப வேண்டியது தானே ?"
"அவர் கிராமத்துல இருக்கறதுல உங்களுக்கு  என்ன பிரச்சனை ?"


"நா ப்ரொபசரா இருக்கேன் .என் பொண்டாட்டியும் கெட்டிக்காரி அவளும் ப்ரொபசரா இருக்கா .இவங்களுக்கு மகனா பொறந்தது என் தப்பு .லூசு ,பைத்தியம் ....."

சட்டென்று கையெடுத்து கும்பிட்டு அவர் அம்மா சொன்னார் ,"நல்லா சாமிய கும்பிட்டுக்க தம்பி .அடுத்த ஜென்மத்திலயாவது ஒனக்கு புடிச்சாப்புல  ஒனக்கு அம்மா கெடைக்கனும்ன்னு ."





Saturday 18 October 2014

ஒரு சொல் கேளீரோ !

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு நேற்று ஒரு டாக்ஸ்சியில் போய்க் கொண்டிருந்தேன் .எனக்கும் அந்த ஓட்டுனருக்கும் நடந்த உரையாடல் இது .

ஓட்டுனர் -என்ன மேடம் நாளைக்காவது அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்குமா ?
நான் - தெரியலையே ?ரொம்ப கஷ்டம்ன்னு சொல்றாங்க .

ஓட்டுனர் -இவ்வளவு முக்கியமான ஆள உள்ளேயே வச்சிருக்க முடியுமா மேடம் ?
நான் - கேஸ் தோத்து போச்சு ,என்ன செய்ய !

ஓட்டுனர்-அது என்ன பெரிய கேஸ் ?ஊர்ல நடக்காததா ?
நான்  - அந்த தடவ இவங்க ஆடுன ஆட்டம் தெரிஞ்சது தான ?

ஓட்டுனர்-என்ன மேடம் அப்படி சொல்றீங்க ?ஒரு முதலமைச்சரா ஆவரவங்க ஒரு அறுபது  கோடி  சம்பாதிக்க மாட்டாங்க ?
நான் - சம்பளம் தான்  கொடுக்கறாங்க இல்ல ?


ஓட்டுனர் -அப்படி  சொல்லாதீங்க மேடம் .வெறும் அறுவது கோடியும் நகையும் தான் .இந்தம்மா முதலமைச்சர் .ஒரு  காசு கூடவா சம்பாதிக்காம இருக்க முடியும் .அதுக்கெல்லாமா கணக்கு வச்சிருப்பாங்க ?அத போய் இந்த கோர்ட் கேக்கலாமா சொல்லுங்க ?அப்புறம் நகை அவ்வளவு இருந்துது இவ்வளவு இருந்துதுன்னுட்டு  .என் பொண்டாட்டி கிட்டயே கிட்டத்தட்ட இருபது பவுன் இருக்கு .நம்மூர்ல எல்லா வீட்லேயுமே  பத்து இருபது பவுன் நகை இருக்கு.அந்தம்மா ,நடிச்சிருக்காங்க ,அரசியல்ல இவ்வளவு வருஷம் இருந்திருக்காங்க , அவங்க கிட்ட இவ்வளவு நகை கூடவா இருக்காது ?அதையெல்லாமா தப்புன்னு சொல்ல முடியும் ?


இந்த பிஜேபிகாரங்க   வேணுன்ட்டே  இந்த மேயர் தேர்தல் பிரச்சனைய மனசுல வச்சுக்கிட்டு இப்படி செஞ்சுட்டாங்க மேடம்.இந்தம்மாவும் கொஞ்சம் விட்டு கொடுத்து போகணும் .


பாவமா இருக்கு .நாளைக்காவது   வெளிய விட்டுறணும் .
 அம்மா வரலைன்னா நாமெல்லாம்  என்ன ஆகுறது ?

அந்தம்மா  ஜெயில இருக்கறது ,ஏதோ நம்ம வீட்ல  ஒரு ஆள்  கொறையர மாதிரி இருக்கு மேடம் .

Tuesday 7 October 2014

அம்மாவும் அரெஸ்ட்டும் சதிகளும் -The Conspiracies

பதினெட்டு வருஷம் எப்படி எப்பிடியோ எங்க எங்கயோ இழுத்து அம்மாவோட வழக்கு முடிவுக்கு வந்தது நாம  எல்லாரும் அறிந்தது தான் .கேஸ் நடந்தது தண்டனை கெடச்சுதுங்கறதை தாண்டி ,இதுக்கு தினத்துக்கு ஒரு போராட்டமும் தினம்  ஒரு சதி திட்ட பின்னணியும்  நமக்கு சொல்லப்படுது . இத பத்தி கொஞ்சம் யோசிப்போம் .இதுல இன்னைக்கு மீண்டும் ஜாமீன் வேற மறுக்கப்பட்டிருக்கு .

1.இது அம்மாவே திரும்ப திரும்ப சொன்னது தான் .அரசியல்  சதி என்ற முது பெரும் தியரி .அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்குகள் புனையப்பட்டது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும் வழக்குகளுக்கு அடிப்படை இருந்தது   அன்றைய ஆட்சியை காண நேர்ந்த அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் இது இந்த தீர்ப்போடு முடிந்துவிடவில்லை .இனி வரும் காலங்களிலும் இது பலமுறை பேசப்படும் என்பதிலும் சந்தேகமில்லை .

2. இந்த தியரி புதுசு .காவிரி நடுவர் மன்ற ஆணையை  gazetteல் வெளியிட செய்ததற்கு கோபம் கொண்ட கர்நாடக அரசு இந்த விதமாக அம்மாவை பழிவாங்கியது என்பதே  தியரி நம்பர் டூ .அதற்கு வலு சேர்க்கும்  விதமாக அம்மா சிறையில் தண்ணீர் கேட்ட போது  குடத்தில் இருக்கும் காவிரி தண்ணீரை குடிக்க சிறை அலுவலர் சொன்னதாக செய்திகள் (?) வேறு .அதோடு அம்மா அந்த ஆணையை கையில் பிடித்தபடி இருக்கும் போஸ்டர்கள் என்று இந்த தியரி புது பூச்சோடு வலம் வருகிறது .

3.நல்லா யோசிச்சு பாத்தா இந்த தீர்ப்புல நேரடியா பலன் பெற்றது ஓபிஎஸ் தான் .மோசமான வழக்கறிஞர்கள ஏற்பாடு செஞ்சு ,கேஸ்ஸ தோக்கடிச்சு ,அம்மாவை உள்ள தள்ளி ,இவரு முதல்வராகி -இப்படி நீளுது இந்த தியரி .

4.அடுத்தது ஒரு டாக்ஸி டிரைவர் சொல்ல கேட்ட அட்ரா சக்க தியரி ."மோடி அம்மாக்கு வேண்டியவர் .மோடி ஊர்ல இல்லாத நேரமா  பார்த்து இந்த பாஜக காரங்க அம்மாவ கேஸ்ல தோக்கடிச்சு உள்ள போட்டுட்டாங்க ."

5.எனக்கு பிடிச்ச தியரி இது .இந்த தேர்தல்ல மோடி அலை  கரை சேர முடியாம போனது நம்மூர்ல மட்டும் தான் .என்னடா இந்தம்மா இப்படி நம்பள ஜுஜுபி ஆக்கியிருச்சேன்னு கோபப்பட்ட பாஜக ,கேஸ் என்னமோ நிஜம் தான் ஆனாலும் ,வழக்கை இந்த நேரத்துல முடிச்சு, அம்மாவ உள்ள தள்ளி  ,தமிழ் நாட்டில ஆட்சிய பிடிக்க முடியாம போனாலும் ,ஏதோ கால் பதிக்கலாம்ன்னு எடுத்த முயற்சியோ என்னவோ ?இப்ப இதுக்கு வலு சேக்குற மாதிரி சில விஷயங்கள்  இருக்கு ..

முதல - முக்கிய எதிர்கட்சியான திமுகவே அடக்கி வாசிக்கும் போது இந்த பாஜக குறிப்பா தமிழ்நாட்டுக்காரங்க ,சட்டம் ஒழுங்கு அது இதுன்னு உதார் விடுறது .அப்புறம் ,நாங்க தமிழ்நாட்டுல கால் பதிப்போம்ன்னு தில்லா  பேசுறது .அப்புறம் இன்னைக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது .இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் .அம்மா உள்ளே ,ஏற்கெனவே திமுக தலைக்கு மேல கத்தி மாதிரி 2G  வழக்கு  இருக்கு .இந்த ரெண்டு சைடும் இப்படி வீக்கா இருக்கிறப்ப ரஜினியை கூட்டிட்டு வந்து தமிழ்நாட்டுல டூயட் பாடலாம்னு நினைக்கிறாங்களோ என்னவோ ?

6.கடைசியா நாம எப்பவும்  பல கேப்டன் படங்கள்ல பார்த்த அந்நிய நாட்டு சதி ஆங்கிள மறந்துட கூடாது .அம்மா ஆட்சியில ஏக சுபிட்சமா இருக்கிற  தமிழ்நாட்டோட வளங்களை சூறையாட அந்நிய ஆட்சியாளர்கள் செய்த சதி .ஒரு பலம் மிக்க தலைமை செயலிழக்கும் போது நாட்டில்  விளையும் குழப்பங்களின் ஆதாயம் தேடும் தியரி -
அப்படி இருந்தா நமக்கு ஒரே கதி கேப்டன் தான் .