Sunday 30 March 2014

தனியே

மலர்களிடத்திருந்து  என்  வைன் கோப்பையை எடுக்கிறேன்
தனியாக குடிக்க ,நண்பர்கள் இல்லாமல்

நிலவை மயக்க  என் கோப்பையை ஏந்துகிறேன்
அதுவும் ,என் நிழலும் ,மூவராகிறோம்

ஆனால் நிலவு வைன் அருந்தாது
என் நிழலும் அமைதியாக தொடர்கிறது

நான் நிலவுடனும் நிழலுடனும் மகிழ்வாக பயணிப்பேன்
வசந்தத்தின் இறுதிவரை

நான் பாடும் போது ,நிலவு ஆடும்
நான் ஆடும் போது ,என் நிழலும் கூட  ஆடும்  

நிதானத்தில் ,வாழ்க்கையின் சந்தோஷத்தை பகிர்கிறோம்
குடித்து ,தனித்தனியே பிரிகிறோம் 

நிரந்தர நண்பர்கள் ,தனியே திரிந்தாலும் 
மீண்டும் சந்திப்போம் பால்வெளியில்   






Drinking Alone

I take my wine jug out among the flowers
to drink alone, without friends.

I raise my cup to entice the moon.
That, and my shadow, makes us three.

But the moon doesn't drink,
and my shadow silently follows.

I will travel with moon and shadow,
happy to the end of spring.

When I sing, the moon dances.
When I dance, my shadow dances, too.

We share life's joys when sober.
Drunk, each goes a separate way.

Constant friends, although we wander,
we'll meet again in the Milky Way. 


Li Po

Friday 28 March 2014

உறக்கமில்லாமல்

இன்றிரவில்   என்வசம்   
உன் கைகள்  இருந்தால்   .....
ஆனால் பாதி உலகமும் உடைந்த கடலும் 
கிடக்கின்றன நம்மிடையே 

வெற்று கல் மேல் பெய்தபடி 
இரவெல்லாம் 
முற்றத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது 
இலையுதிர்காலத்து மழை 
பாழான முற்றத்தில் 
வீணாகும் மழையின் ஓசை 
இன்னமும் தனியாக்குகிறது என்னை 

நீ இங்கு இருந்தால் ,
இங்கு மட்டும் நீ இருந்திருந்தால்
வீணாய் உன்னிடம்
ஓலமிடுகிறது என் ரத்தம் 
இரவெல்லாம்...
உறக்கமில்லாமல்
மழையை  போலவே  

Sleepless  

Sara Teasdale

If I could have your arms tonight-
But half the world and the broken sea
Lie between you and me.

The autumn rain reverberates in the courtyard,
Beating all night against the barren stone,
The sound of useless rain in the desolate courtyard
Makes me more alone.

If you were here, if you were only here-
My blood cries out to you all night in vain
As sleepless as the rain.


Thursday 27 March 2014

பாடல்

அடிப்பட்ட  குழந்தை போல் 
அழுதது என் இதயம் 
நிறுத்தமில்லாமல்  இரவு முழுதும் 
என் அழுகைகள் சேர்த்து நான் 
ஒரு பாடலாய் கோர்க்க வேண்டியிருந்தது 

ஒரு அழுகை கருத்த நள்ளிரவிலும் 
ஒன்று முதல் சேவல் கூவிய போதும்---
அடிபட்ட குழந்தை போல்
இருந்தது என் இதயம் 
ஆனால் எவரும் அறியவில்லை 

வாழ்க்கையே , என்னை உன் கடனாளி ஆக்கினாய் 
நெடுநாள் உனக்கு பணி செய்யவேண்டும் நான் 
ஓ ஆனால் ,இந்த கடன் கொடுமையானது 
இது பாடலால் தீர்க்கப்பட வேண்டும்

 

Song Making
 Sara Teasdale
My heart cried like a beaten child
Ceaselessly all night long;
I had to take my own cries
And thread them into a song.

One was a cry at black midnight
And one when the first cock crew --
My heart was like a beaten child,
But no one ever knew.

Life, you have put me in your debt
And I must serve you long --
But oh, the debt is terrible
That must be paid in song.


Sunday 23 March 2014

போடுங்கம்மா ஓட்டு

வாராக வாராக
வாராதவுக  வாராக
வாராம இருந்தவுக
வரிசையாக வாராக

பல வருஷம் காத்திருந்தோம்
பல தெசைய பாத்திருந்தோம்
பல சமயம் தூது விட்டு
கண் நோவ காத்திருந்தோம்

தேடினப்ப கெடக்கலையே
வாடினப்ப வாரலையே
இப்ப வரிசையாக வாராக
விமர்சையாக வாராக

ஆளுக்கொரு சின்னம்  கட்டி
ஊருக்கொரு வேஷம் கட்டி
வார்த்தைக்கொரு பல்லிளிச்சு
வாசல்வரை வாராக

ஓட்டு எண்ணி முடிச்சதுமே
ஓட்டம் எடுத்து போனாக
பேரு பதவி கண்டதுமே
ஆளு  மாறி போனாக

வெறப்பாக போனவுக
நெளிஞ்சி கொழஞ்சி வாராக
மெதப்பாக இருந்தவுக
பணிவாக வாராக

அய்யான்னு  கொழையுராக 
அம்மான்னு கொஞ்சுராக
ஓட்டத்தான் போடுங்கன்னு
ஓயாம கெஞ்சுராக

சாக்கடையில தேனாக
ஓடும்ன்னு சொல்லுறாக
கேப்பையில நெய்யாக
வடியும்ன்னு சொல்லுறாக

காதுவர சிரிக்கிராக
தேனொழுக பேசுறாக
ஏதேதோ செஞ்சதாக
பெருமையாக பீத்துராக

அய்யாவே அம்மாவே
ஓட்டு கேக்கும் தொரமாரே
போட்ட வேஷம் கலச்சுபுட்டு
புது வேஷம் போட்டவரே

ஹெலிகாப்டர் பறக்கையில
வாய் பொழந்து பாத்திருப்போம்
மைக்க புடிச்சி பேசுறப்ப
 கைய தட்டி ரசிச்சிருப்போம்


புழுகித்தான் பேசினாலும்
நம்புனாப்புல கேட்டிருப்போம்
ஓட்டுக்கு நோட்டுன்னு
கொடுக்கிறத சேத்து வைப்போம்

குறிச்சு வச்ச தேதியில
ஓட்டத்தான்  போட்டிருவோம்
ஒங்க கணக்கை எல்லாம் தப்பாக்கி
புது கணக்கா மாத்திருவோம்











 

 





  





பொய்கள்

பொய்யர்களின் கூடாரமாக இருக்கின்றது
உலகம்
தத்தம் பொய்களை பொதிகளாக சுமந்தபடியே
வலம்  வருகின்றனர் பலரும்
இப்பொதிகளுள்ளே சிறைப்பட்டிருக்கின்றன
சிலபல மெய்களும்
அன்னப்பறவைகளாக  இருந்தாலன்றி
இவற்றை இனம் பிரிப்பது சாத்தியம் இல்லை தான்


மெய்கள் தோய்த்தே  ஆக்கப்படுகின்றன
பல பொய்கள்
மெய்  தோய்ப்பில்லாத பொய்கள்
சில நாள் ஓட்டத்தில் செத்து போகின்றன
மெய் தோய்த்த பல பொய்களில்
சில நாளில் மெய் மரித்து போகிறது
உயிர்த்திருக்கிறது பொய்யே  மெய்யென

பொய் கலவாமல்  இருக்கின்றன
சில மெய்கள்  -பிடிவாதமாய்
அவற்றை வன்புணர முயற்சித்தபடியே இருக்கின்றன
ஆணவக்கார பொய்கள்
தப்பியசில மெய்கள்
ஒளிந்தே கிடக்கின்றன
அப்பொய்கள் மரிக்கும் வரை
மெய்களாகவே






Tuesday 18 March 2014

அன்புடைமை

இன்று  காலையில் நான் என் அறையில் உட்கார்ந்திருக்க அவசரமாய் வந்தார் அந்த மூதாட்டி .இவரின் மகனும் மருமகளும் என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் . அவர்கள் இருவரும்  சிகிச்சைக்கு வருவார்கள் .இவர் எப்போதேனும் வருடம் ஒரு முறை போல வந்து போவார் ,இவர்களது உடல்நிலை குறித்து அறிந்து போக .இவர் தென் தமிழ்நாட்டு கிராம பகுதியை சேர்ந்தவர் .முன் கொசுவம்  வைத்து புடவை கட்டி அள்ளி முடிந்து கொண்டை  போட்டிருப்பார் எப்போதும் .

வந்தவர் வேகமாக ,"ரெண்டு தடவையும் வந்தப்ப நீ இல்லையாம் ,அதனால இந்த பாவி பைய டாக்டர் அம்மாவ  பாக்கவே முடியல .அவங்க வாரதே இல்லன்னு சொல்லிபுட்டான் .அவங்க இல்லைனா நா வரலைன்னு சொல்லியிருக்கேன் .நேத்து வந்து டிக்கெட் போட்டுட்டேன் சும்மா வாங்கன்னு சொல்றான் .சரி அம்மாளுக்குன்னு கொஞ்சம் வாழக்காய் ,அரிசி எடுத்து வச்சிருக்கேன்னு  சொல்ல ,அவுக இருக்குறதே இல்ல ,எல்லாத்தையும் சொமந்துட்டு போயி திரும்ப சொமந்துக்கிட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டான் .போன தடவ இப்படித்தான் பனங்கிழங்கு எடுத்து வச்சு குருத்துவிட்டு போச்சு .நாச்சியா நீ  வாரமயே இருந்திட்டியே .இங்க வந்ததும் டாக்டரம்மா உள்ள தான் இருக்காங்க வேணும்னா போயி பேசிட்டு வான்னு சொல்றான் .

நாச்சியா ,எனக்கு உடம்பே முடியல .அடுத்த தடவையெல்லாம் வர முடியுதான்னு தெரியல .சாவறதுக்கு முன்னாடி ஒன்னைய பாத்திரனும்ன்னு நெனச்சேன் .இம்புட்டு  பெரிய தேங்கா ஏழு ,ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு தார வாழப்பழம்,வெளிய வச்சாலே பழுத்து போகும் .நல்ல நாட்டு பழம் .அம்புட்டும் எடுத்து வச்சேன் .நாச்சியா ,இல்லன்னு சொல்லி கொண்டு  வார முடியாம பண்ணிட்டானே படுபாவி .

இனிமேட்டு என்னால வர முடியாது .அய்யாவுக்கு வேற மேலுக்கு முடியல .நாச்சியா நீ எங்க ஊரு பக்கம் வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும் .நீ ஸ்டேஷனுக்கு வந்து  ஒரு போன் மட்டும் போடு ,நா வந்து கூட்டியாறேன் .ஒனக்கு என்ன வேணுமோ சப்பாத்தி ,பூரி ,கேப்ப களி  நீ என்ன கேக்குறியோ செஞ்சு  தாரேன்   .நாச்சியா ,நீ கண்டிப்பா வரணும் ."