Saturday 2 March 2013

திருமணம் -இனியொரு விதி செய்வோம்

இன்று ஒரு நாளிதழில் வந்திருந்த இரண்டு செய்திகள் .

1. தன் கணவரை சுட்டு கொன்றதற்காக  ஒரு பெண்ணிற்கு தண்டனை இன்று உறுதி செய்யப்பட்டது
2. கணவன் மனைவியை உறவிற்கு வற்புறுத்துவது  வன்முறை என்று சட்டமாக்கினால்  திருமணத்தின் புனிதத்தை அது கெடுக்கும் என்ற திரு .வெங்கையா நாயுடுவின் வாதம் .

 திருமணம் என்பது  புனிதமானதாகவும்  தெய்வீகமானதாகவும் போற்றப்படுவது வழக்கமாக இருக்கிறது .தெய்வங்களுக்கு இடையே நடக்கும்  திருமணங்களிலேயே பலவித சிக்கல்கள் நேர்ந்ததாக நம்முடைய புராணங்கள் சொல்கின்றன .இதில் இங்கு நடப்பவை   வெறும் மனிதர்களிடையே என்பதால் இதில் சிக்கல்கள் தவிர்க்க  முடியாததாக இருக்கின்றன .

பெண் ஆணைவிட வயது ,உயரம் ,படிப்பு என்று  வசதியை தவிர்த்து எல்லாவற்றிலும்  குறைந்தவளாகவே இருக்க வேண்டும் என்பதிலேயே இங்கு பொருத்தங்கள் ஆரம்பிக்கின்றன .பெண்  கணவனுக்கும் அவனது   குடும்பத்தினருக்கும் அவள் கொண்டு செல்லும் சீதனம் போலவே உரிமையுள்ள  பொருளாகிறாள் .இதில்  படிப்பு ,பணி ,குழந்தை பிறப்பு ,கருத்தடை ,குழந்தைகளுக்கு பெயரிடுவது முதற்கொண்ட எந்த உரிமையும் பெண்களுக்கு மறுக்கப்பட்டதான ஆண்டான் அடிமை உறவாகவே பெரும்பான்மையான நேரங்களில் திருமணம்  இருக்கிறது .

இன்றைய  சூழலில் பெண்கள் கல்வியும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும்  இந்த உறவுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை விவாத பொருளாக்கியிருக்கின்றன .

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் விருப்பமில்லாத ஒரு செயலை செய்ய  கட்டாயப்படுத்துவது   மனதை வருத்தும் வன்முறையே .இதில் பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் திருமண எல்லைக்குள் நடைபெறுபவையாகவே   இருக்கின்றன .பல காரணங்களுக்காக இவை தொடர்ந்து ஏற்கப்பட்டு வருகின்றன .ஆனால் இவை சகித்துக் கொள்ளப்படுவது இவற்றை நியாயப்படுத்திவிடாது .

 ஏற்ற தாழ்வுகளையும்  பிரச்சனைகளையும்,விவாதத்திற்கு உட்படுத்தி  களைவது மட்டுமே  திருமணங்களை  பலப்படுத்த முடியும் .தவறுகள் புனிதம் ,கலாச்சாரம் என்ற  பினாமிகள் பெயரால் நியாயப்படுத்தப்படுவது  புண்களை சீழ்பிடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பது   போன்றதாகும் .

மனைவி என்ற ஒரே காரணத்திற்காக ஒரு  பெண் ஆண்  எதிர்பார்க்கும்  நேரத்தில் உறவுக்கு உட்பட வேண்டும் என்பது மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் வருத்தும் உச்சகட்ட வன்முறை .விருப்பமில்லாத பெண்ணுடன் உடலுறவு கொள்வது என்பது வன்புணர்ச்சியே ,அந்த பெண் பாலியல் தொழில் செய்பவளாக  இருந்தாலும் ,மனைவியாக  இருந்தாலும் ...


8 comments:

பால கணேஷ் said...

ஏற்றமிகு கருத்துகள்! எனக்கும் ஏற்புடைய கருத்துக்கள்! அதிலும் கடைசிப் பாரா பளீர்! நன்று(றி) பூங்குழலி1

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிகவும் அருமையான பதிவு சகோதரி. தொடருங்கள். இக் கட்டுரையை ஊடறு, பெண்ணியம் ஆகிய இணையத்தளங்களுக்கு அனுப்புங்கள். பலருக்கும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

www.oodaru.com
http://www.penniyam.com/

பூங்குழலி said...

திருமணம் என்பதற்குள் வன்முறைகள் ஏற்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை மீறல் .மிக்க நன்றி கணேஷ்

பூங்குழலி said...

மிக்க நன்றி ரிஷான் .நிச்சயம் அனுப்புகிறேன்

Sakthivel said...

குடும்பங்களில் உள்ள வன்முறை மற்றும் படுக்கை அறையின் வன்முறையை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.. நன்றி

@sakthivel_twitt

பூங்குழலி said...

ஆமாம் சக்தி ,திருமணம் என்பது பல வன்முறைகளுக்கு அங்கீகாரம் தரும் அரிதாரமாக இருக்கிறது

சசிகலா said...

பெண் என்பவள் இன்னமும் அடிமையாக மட்டுமே பார்க்கப்படுகிறாள்.

பூங்குழலி said...

ஆமாம் பெண் என்பவள் அடிமை +போகப் பொருள் ....நன்றி சசிகலா