Tuesday 19 March 2013

மாற்றம்

நான் அன்றிருந்தது போல 
என்னை நினைவில் கொள் .
இப்போது என்னிடமிருந்து திரும்பி போ 
ஆனால் எப்போதும் பார்த்திரு..
கோடை இரவில் 
நடுங்கும் நட்சத்திரங்கள்  போல 
கண்களை காதல் மின்ன செய்ய,
நள்ளிரவில் நிழலாய் 
பூத்துக் குலுங்கும் மரத்தடியில்
சிரிப்புதிர நின்ற அந்த சின்னவளை ...   
 
 
இப்போது என்னிடமிருந்து திரும்பி போ 
ஆனால் எப்போதும் கேட்டிரு ,
நம்மிடமிருந்த  இளமையின் ஒற்றை  வருடத்தின்   
பனியில் ஓசை நழுவிய சிரிப்பை
நாம் அறிந்த ஒரே  இளமை ...
இப்போது என்னிடமிருந்து திரும்பி போ
இல்லையேல் நீ காணலாம் 
என்னை என்ன செய்திருக்கின்றன
பிற வருடங்கள் என...  
 

 

Change

By Sarah Teasdale 

Remember me as I was then;
Turn from me now, but always see
The laughing shadowy girl who stood
At midnight by the flowering tree,
With eyes that love had made as bright
As the trembling stars of the summer night.

Turn from me now, but always hear
The muted laughter in the dew
Of that one year of youth we had,
The only youth we ever knew --
Turn from me now, or you will see
What other years have done to me.

Monday 18 March 2013

ஒரு பிராத்தனை

பூமியின் அழகிற்கு குருடாக ,
இரைந்தே கடப்பினும் 
காற்றிற்கு செவிடாக,  
மனக்களிப்பின் புயலில் ஊமையாக 
என் ஆவி தொலைத்து 
நான்  சாயும்  வரை  

என் இதயத்தின்  தாகமெல்லாம் 
தணிக்கப்படும் வரை
மனிதர்களின் மண் விடுத்து 
நான் போகும் வரை
ஓ ,என் மொத்த  வலுக்கொண்டு 
நான் நேசிக்க வேண்டும் ,
நேசிக்கப்பட வேண்டும் 
என்ற கவனமின்றி ....

 

 


A Prayer

By Sarah Teasdale 

Until I lose my soul and lie
Blind to the beauty of the earth,
Deaf though shouting wind goes by,
Dumb in a storm of mirth;

Until my heart is quenched at length
And I have left the land of men,
Oh, let me love with all my strength
Careless if I am loved again.


Thursday 14 March 2013

ரசவாதம்

மஞ்சள் நனைத்த டெய்சியை  
மழைக்கு ஏந்தும் 
வசந்தம் போல 
என் இதயத்தை ஏந்துகிறேன் ,
ஒரு அழகிய கோப்பையாயிருக்கும் 
என்  இதயம் 
அதில்  ஏந்தியிருப்பது வலியே  எனினும் 

ஏனெனில் ,
ஏந்தும் துளியிலெல்லாம்  வர்ணம் பூசும் 
மலரிடம்  இலையிடம்  கற்றுக்கொள்வேன் 
உயிரற்ற வைன்னான  விசனம் -அதை 
உயிர்ப்புள்ள தங்கமாக  மாற்ற 

 

Alchemy

By Sarah Teasdale 

 I lift my heart as spring lifts up
A yellow daisy to the rain;
My heart will be a lovely cup
Altho' it holds but pain.

For I shall learn from flower and leaf
That color every drop they hold,
To change the lifeless wine of grief
To living gold.


Wednesday 13 March 2013

பிரிந்த பின்

 

ஓ , என் காதலை அத்தனை அகல விதைத்திருக்கிறேன்
அவன் எங்கும் காணக் கிடைக்கும்  வகையில் 
அது இரவில் அவனை விழிக்க செய்யும் 
அது காற்றில் அவனை  அரவணைத்திருக்கும் 

என் நிழலை அவன் பார்வையில் நிறுத்தியிருக்கிறேன் 
நிறுத்தியிருக்கிறேன் ,ஆசை சிறகுகள் பூட்டி
அது பகலில்  மேகமாய் இருக்கும் படியும்
மேலும் இரவில் நெருப்பு பிழம்பாய் 

 

After Parting

By Sarah Teasdale 

Oh, I have sown my love so wide
That he will find it everywhere;
It will awake him in the night,
It will enfold him in the air.

I set my shadow in his sight
And I have winged it with desire,
That it may be a cloud by day,
And in the night a shaft of fire.


Tuesday 12 March 2013

என் இதயம்

 

என் இதயம் கனத்திருக்கிறது
பல பாடலால் 
கனிந்த கனிகள் அழுத்தும்
கனிமரம் போல
இருந்தும்  ஒரு பாடலை
தரவே முடியாது நான்
என் பாடல்கள்
என்னுடையவை  இல்லை

ஆனாலும்
மாலையில் அந்தியில்
அங்கும் இங்கும்  அந்துப்பூச்சிகள்
உலாவும்  வேளையில்  
சாம்பல் பொழுதில்
கனி விழுந்திருந்தால்
எடுத்துக் கொள் .
எவர்க்கும் தெரியாது 





 "My Heart Is Heavy"
By Sarah Teasdale 
My heart is heavy with many a song
Like ripe fruit bearing down the tree,
But I can never give you one --
My songs do not belong to me.

Yet in the evening, in the dusk
When moths go to and fro,
In the gray hour if the fruit has fallen,
Take it, no one will know.


Saturday 2 March 2013

திருமணம் -இனியொரு விதி செய்வோம்

இன்று ஒரு நாளிதழில் வந்திருந்த இரண்டு செய்திகள் .

1. தன் கணவரை சுட்டு கொன்றதற்காக  ஒரு பெண்ணிற்கு தண்டனை இன்று உறுதி செய்யப்பட்டது
2. கணவன் மனைவியை உறவிற்கு வற்புறுத்துவது  வன்முறை என்று சட்டமாக்கினால்  திருமணத்தின் புனிதத்தை அது கெடுக்கும் என்ற திரு .வெங்கையா நாயுடுவின் வாதம் .

 திருமணம் என்பது  புனிதமானதாகவும்  தெய்வீகமானதாகவும் போற்றப்படுவது வழக்கமாக இருக்கிறது .தெய்வங்களுக்கு இடையே நடக்கும்  திருமணங்களிலேயே பலவித சிக்கல்கள் நேர்ந்ததாக நம்முடைய புராணங்கள் சொல்கின்றன .இதில் இங்கு நடப்பவை   வெறும் மனிதர்களிடையே என்பதால் இதில் சிக்கல்கள் தவிர்க்க  முடியாததாக இருக்கின்றன .

பெண் ஆணைவிட வயது ,உயரம் ,படிப்பு என்று  வசதியை தவிர்த்து எல்லாவற்றிலும்  குறைந்தவளாகவே இருக்க வேண்டும் என்பதிலேயே இங்கு பொருத்தங்கள் ஆரம்பிக்கின்றன .பெண்  கணவனுக்கும் அவனது   குடும்பத்தினருக்கும் அவள் கொண்டு செல்லும் சீதனம் போலவே உரிமையுள்ள  பொருளாகிறாள் .இதில்  படிப்பு ,பணி ,குழந்தை பிறப்பு ,கருத்தடை ,குழந்தைகளுக்கு பெயரிடுவது முதற்கொண்ட எந்த உரிமையும் பெண்களுக்கு மறுக்கப்பட்டதான ஆண்டான் அடிமை உறவாகவே பெரும்பான்மையான நேரங்களில் திருமணம்  இருக்கிறது .

இன்றைய  சூழலில் பெண்கள் கல்வியும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும்  இந்த உறவுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை விவாத பொருளாக்கியிருக்கின்றன .

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் விருப்பமில்லாத ஒரு செயலை செய்ய  கட்டாயப்படுத்துவது   மனதை வருத்தும் வன்முறையே .இதில் பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் திருமண எல்லைக்குள் நடைபெறுபவையாகவே   இருக்கின்றன .பல காரணங்களுக்காக இவை தொடர்ந்து ஏற்கப்பட்டு வருகின்றன .ஆனால் இவை சகித்துக் கொள்ளப்படுவது இவற்றை நியாயப்படுத்திவிடாது .

 ஏற்ற தாழ்வுகளையும்  பிரச்சனைகளையும்,விவாதத்திற்கு உட்படுத்தி  களைவது மட்டுமே  திருமணங்களை  பலப்படுத்த முடியும் .தவறுகள் புனிதம் ,கலாச்சாரம் என்ற  பினாமிகள் பெயரால் நியாயப்படுத்தப்படுவது  புண்களை சீழ்பிடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பது   போன்றதாகும் .

மனைவி என்ற ஒரே காரணத்திற்காக ஒரு  பெண் ஆண்  எதிர்பார்க்கும்  நேரத்தில் உறவுக்கு உட்பட வேண்டும் என்பது மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் வருத்தும் உச்சகட்ட வன்முறை .விருப்பமில்லாத பெண்ணுடன் உடலுறவு கொள்வது என்பது வன்புணர்ச்சியே ,அந்த பெண் பாலியல் தொழில் செய்பவளாக  இருந்தாலும் ,மனைவியாக  இருந்தாலும் ...