Wednesday 7 March 2012

ராசா மகன்












பாராளும் பரம்பரைக்கு 

ஒருத்தனாக பொறந்த மகன்

ராசாத்தி ராசன் மகன்

மகராசன் கொள்ளுப்பேரன்


கன்னத்துல காத்து பட்டா 

கல்லு போல கன்னிப் போகும்

மேலுலத் தான் வெயிலு பட்டா

தோலெல்லாம்  வெடிச்சு  போகும் 



தங்க தட்டில் ரொட்டி தின்னு

நோட்டுல தான் கை தொடச்சி

பூ பாதம் நோகுமின்னு

கைமேல நடந்த தொர



அரண்மனை சொகத்த விட்டு

தெருவோட திரிஞ்சதென்ன

ஆளு சேன அம்பாரி

அத்துபுட்டு போனதென்ன   



உம்முன்னா ஓடி வர

நூறு பேரு இருக்கையில

வெறும் பய வீட்டிலெல்லாம்

சேவகம் தான் செஞ்சதென்ன



வகைக்கு ஒண்ணா தான்

சோறு பொங்கி கெடக்கையிலே

பட்டி தொட்டி பல திரிஞ்சி

பழைய கஞ்சி குடிச்சதென்ன



குடிசைக்கு தான் போனதென்ன

கடகண்ணி கண்டதென்ன

கண்ட பய தோள்மேல

கைபோட்டு நின்னதென்ன



ஆளில்லா சீமையில

அரசாள வந்த மகன்

மன்னரின்னு பட்டம் கட்டி

ஆள வந்த சீமதொர



செவத்த தோலு கருகருக்க

சேரிக்குள்ள போனதென்ன

சீமசென்ட் வாசன போய்

வியர்வ கண்ட கோலமென்ன




எடுபட்ட பயல்வளுக்கு

பெருமையெல்லாம் தெரியலையே

வீடு தேடி வந்து நின்ன

மவராசன் மனம் வெளங்கலியே



ஆகாச வெமானமெல்லாம்

வரிச கட்டி காத்திருக்க

அழுக்கான ரயில் ஏறி

போனபோதும் புரியலையே



கூட்டமா வந்து நின்னு

கூடித்தானே பாத்தாங்க

போட்டோவுல நெருக்கமாதான்

பல்லிளிச்சி நின்னாங்க



வீட்டுக்குள்ள வந்தப்ப 

கூழூத்த மறுக்கலையே 

கயத்து கட்டில் இழுத்துபோட்டு 

வீசி விட சொனங்கலையே 


வீடு வரை வந்தவுக 

வீதிவரை வாரலியே

வீதியில நின்னவுக 

பூத்து போயி சேரலையே 


போயி சேந்த பயலெல்லாம் 

மாத்தி போட்ட சோகமென்ன  

கஞ்சி ஊட்டி விட்டுபுட்டு

கைகழுவி போனதென்ன 


என்ன செஞ்சு என்ன செய்ய 

எங்க போயி சொல்லி அழ 

முச்சந்தியில் நிக்க வச்சு 

மூக்கறுத்தா ,எத சிந்த 



சொல்லி சொல்லி மாளலியே 

மனசு சொம எறங்கலியே 

மவராசன் அழகு மொகம்

காண மனம் பொறுக்கலியே 


சொரிஞ்சிவிட்ட முதுகெல்லாம் 

செரங்காத்தான் அப்பிடனும் 

கஞ்சி  போட்ட கைமொத்தம்  

வெளங்காம போயிரனும்


வோட்டு போட்ட பெரியவுக 

வேக்காட்டில் வெந்திடனும்

மாத்தி போட்ட மைனரெல்லாம் 

மக்கித் தான் போயிரனும் 


அரும தொர  மானமிப்ப 

கடசரக்கு ஆனதென்ன 

கண்ட பய பல்லுபட்டு 

பெரும கெட்டு போனதென்ன 


அழுதழுது  ஓஞ்சாலும்

போக வேற வழியுமில்ல 

அஞ்சு வருசம் ஆகும் முன்னே 

அங்க ஆள சாரமில்ல 


ஆத்தாளும்  அக்காளும்

அருமையான மச்சினரும்  

கண்ணுபட்டு வந்த  கொற 

காணாம போனதுன்னு 




மன்னருன்னு மகுடம் கட்டி 

அரசாள  பாத்திருங்க 

சீராக தோது செஞ்சி 


சிங்-காசனம் ஏத்திருங்க ....  







  


  









































5 comments:

Avargal Unmaigal said...

கலக்கிட்டீங்க..வாவ் மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு. இரண்டு முன்று தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்

என்றும்அன்புடன்
உங்கள் சகோதரன்
மதுரைத்தமிழன்

விச்சு said...

கவிதைக் களமும் கையாண்ட விதமும் அருமாய்.

பூங்குழலி said...

ரொம்ப ரொம்ப நன்றி தோழர் மதுரைத்தமிழன் அவர்களே

பூங்குழலி said...

மிக்க நன்றி விச்சு

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html