Friday 23 April 2010

சந்தனமுல்லையின் அழைப்பிற்கிணங்க .....

நானும் கடவுளும்
-----------------------

எங்கே ஆரம்பிப்பது என்பதே கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது .
எங்கள் குடும்பம் திருநெல்வேலியில் ஆலடிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியலிங்கசாமி கோவிலின் பூசாரி குடும்பம்.ஆனாலும் என் அப்பா ,பெரியப்பாக்கள் இருவரும் இளமையிலேயே நாத்திகரானார்கள் .இன்னமும் என் அப்பாவுக்கு கோவிலின் விஷேஷங்களுக்கு வரும் பத்திரிக்கையில் பூ என்ற அடைமொழி சேர்த்தே எழுதப்பட்டிருக்கும் (பூசாரி என்பதன் சுருக்கமாம் ) .மிதமான ஒரு பக்தியே அந்நாளில் அம்மாவுக்கும் இருந்தது.இந்த சூழலில் பெரிய கடவுள் வழிபாடு என்று எதுவும் வீட்டில் நடந்ததில்லை .

கடவுளை எனக்கு தீவிரமாக அறிமுகப்படுத்தியது நான் படித்த ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி .இங்கு கிறிஸ்துவ பாடல்கள் ,பிராத்தனை என்று முழு வீச்சில் கடவுள் எனக்கு கடவுள் அறிமுகமானார் .அதனுடன் பைபிளைப் படிக்கும் scripture என்ற பாடத்திற்கு வருடா வருடம் பரிசு வழங்கப்படும் .அதுவும் நான் பள்ளி முடிக்கும் வரை எனக்கே தரப்பட்டதால் நான் பைபிளை தீவிரமாக படித்தேன் .இப்படி இருந்த போதும் ஒரு நாள் கூட என் ஆசிரியர்கள் யாரும் என்னிடம் மதமாற்றத்தை பற்றியோ ,உங்கள் கடவுள் கல்,களிமண் என்றோ பேசியதில்லை .காலை வந்ததும் ஒரு பாடல் ,சாப்பிடும் போது ஒன்று ,வீட்டிற்கு கிளம்பும் போது ஒன்று என ஒரு குதூகலமான மதமாக எனக்கு அறிமுகமாகியது கிறிஸ்துவம் .இன்றும் நான் சிறந்த பிராத்தனையாக கருதுவது ,நான் பள்ளியில் கற்றுக் கொண்ட ,"பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே /Our Father which art in heaven" என்ற பிராத்தனை தான் .

இது ஒரு பக்கம் இருந்தாலும் ,தினமும் காலையில் சாமி கும்பிட்டு திருநீறு பூசி ,அதனடியில் குங்குமம் வைத்து ( கண்ணாடி பார்த்து தான்) பள்ளிக்கு செல்வதும் கூட என் அன்றாட வழக்கமாக இருந்தது.இதை செய்தால் நல்லது என்ற நம்பிக்கையை விடவும் இதை செய்யாமல் விட்டுவிட்டால் ஏதேனும் தீமை ஆகி விடுமோ (ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால் என்று பெரியார்தாசன் பயந்து போனாரே அது போல ) என்ற ஒரு பயமே இதன் அடித்தளத்தில் இருந்தது .பூ தொடுத்து சாமி படத்துக்கு சூட்டுவது பிள்ளையாருக்கு அருகம்புல் வைப்பது என்று தினம் சாப்பிடுவதைப் போலவே ஒரு வழக்கமாக செய்து கொண்டிருந்தேன் .கல்லூரி வரை கடவுளைப் பற்றியோ எந்த ஒரு தீவிர சிந்தனையோ சந்தேகமோ எனக்கு வரவில்லை என்றே சொல்ல வேண்டும் .

கல்லூரி இறுதி ஆண்டில் திருமணம் ஆனது .என் மாமியார் வீட்டிலோ பக்தி கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது .இதில் சில காலம் திக்குமுக்காடிப் போன நான் ,மூச்சடைத்துப் போனேன் .ஒன்றிரண்டு சாமி படங்கள் மட்டுமே பார்த்து பழகிய எனக்கு இங்கே பூஜை அறையில் இருந்த கிட்டத்தட்ட இருபது படங்கள் ,வழிப்பாட்டு முறைகள் என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தது .இதனூடே ,முதல் ஆறு மாதங்களில் கர்ப்பமாகவில்லை என்பதற்காக என் மீது திணிக்கப்பட்ட பரிகாரங்களும் வேண்டுதல்களும் காரணமாக இதுவரை நான் பெரிதாக சிந்தித்திராத கடவுளை நான் வெறுக்க துவங்கினேன் .இதில் last straw வாக அமைந்தது ஒரு திருப்பதி விஜயம் .பணத்திற்கு பெருமாள் பணயம் இருப்பதாக தோன்றியது எனக்கு .பணமில்லாதவர்கள் தள்ளப்படுவதும் ஐம்பது ரூபாய் தருபவர்கள் இன்னும் சில நிமிடங்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவதும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் லஞ்சமாக கொடுத்த பத்து ரூபாயை "சீ ,இவ்வளவு தானா ?" என்று ஒரு ஊழியர் தூக்கி எறிந்த போது கடவுள் எனக்கு அந்நியரானார் .
கோவில்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டேன் .பரிகாரங்கள் செய்ய மறுத்தேன் .நானும் நாத்திகத்திற்கு மாறிவிட்டதாக எல்லோரும் பயந்து போனார்கள்.

என் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல் இது .என் தோழி ஒருத்தி திருப்பதியைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தாள் .நான் வழக்கம் போலவே குறை சொல்லிக் கொண்டிருந்தேன் ."ஏன் இப்படி சொல்றீங்க ""என்று வருத்தமாக கேட்டாள் . "நீ ஏன் பெருமாள் தான் பெரிய கடவுள்ன்னு சொல்ற ?" என்று கேட்டேன் நான் ."அவரு தான் நாம கேட்டத கொடுக்குறாரு "என்றாள் ."பணம் கேட்பதும் பெறுவதும் தான் பக்தியா ?"என்று நான் கேட்டதிலிருந்து என்னிடம் கடவுள் பற்றியே பேசுவதில்லை அவள் .
அன்றிலிருந்து என் மருத்துவமனையிலும் எனக்கு நாத்திக பட்டம் கொடுக்கப்பட்டுவிட்டது .

பெண்ணாக இருந்து கொண்டு திருநீறு அணியாமல் விரதங்கள் இல்லாமல் கோவிலுக்கு செல்லாமல் இருப்பது என்னை சுற்றிய பல பேருக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது .என்னை சுற்றி இருப்பவர்கள் பலரும் என்னிடம் கடவுளைப் பற்றி பேசாதிருப்பதே நல்லது என்றே நினைக்கிறார்கள் .


இதைத் தொடர்ந்து சிந்தித்ததில் எனக்கு புரிந்தது இது தான் .
சகலத்தையும் இயக்கும் ஒரு சக்தி இருப்பதாகவே நம்புகிறேன் நான் .அந்த சக்தி நம்முள் இருக்கிறது .அதை உணர்த்து கொள்ள வேண்டுமே தவிர்த்து அதற்கென வெளி மரியாதைகள் செய்வதில் அர்த்தமில்லை . இதை உணரும் வரை எந்த கோவிலிலும் கடவுள் கிடைக்கப் போவதில்லை . இதை உணர்ந்து கொண்டால் எந்த கோவிலிலும் கடவுளை தேட வேண்டியதில்லை .

http://sandanamullai.blogspot.com/2010/04/blog-post_12.html
சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!

நன்றி சந்தனமுல்லை .

Wednesday 21 April 2010

தேர்தல் நோய்

சில நாட்களுக்கு முன்னால் ஒரு நோயாளியை அதிகப்படியான வயிற்று வலியுடன் அழைத்து வந்தார்கள் . சில நாட்களாக அவர் அதிகம் குடித்ததாக சொன்னார்கள் . தாங்க முடியாமல் துடியாய் துடித்து கொண்டிருந்தவருக்கு முதலுதவிகள் செய்த பின் ,பரிசோதனைகள் செய்ததில் கணையம் ரொம்பவே புண்ணாகி இருப்பது போல் தெரிந்தது .அதற்கான சிகிச்சை வசதிகள் எங்களிடம் இல்லாததால் வேறு ஒரு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தோம் .


நான்கு நாட்களுக்கு முன்னால் ,இவரின் மனைவி சிகிச்சைக்கு வந்தார் .எப்படி இருக்கிறார் என்று விசாரித்த போது ,நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்ததாகவும் ,இப்போது நலமாக இருப்பதாகவும் சொன்னார் .அதோடு ,"ரொம்ப மாசமா குடிக்காம இருந்தார் .இப்பத் தான் தொடர்ந்து இப்படி அதிகமா குடிச்சு ஒடம்புக்கு வந்திடுச்சி" என்று சொன்னார் .இவ்வளவு நாளா குடிக்காம இருந்தவரு ஏன் திடீருன்னு இப்படி குடிச்சாரு? "என்று கேட்ட போது ,"கட்சியில இருக்காரு .எலக்க்ஷன் வேலைக்கு பென்னாகரம் போனாரு ,அங்க தான் இப்படி ஊத்தி விட்டு வேல வாங்கியிருக்காங்க .மூணு மாசமா அங்க தான் இருந்தாரு .அதில வந்த வென தான் ."

Saturday 17 April 2010

இன்று பிறந்தநாள் ...


60௦ வருடங்கள் பொறுப்பான மகளாக ,அன்பான தங்கையாக,
57 வருடங்கள் நல்ல அக்காவாக,
39 வருடங்கள் இலக்கணம் மாறாத மனைவியாக ,மருமகளாக ,
37 வருடங்கள் அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே கொட்டித் தரும் அன்னையாக,
35 வருடங்கள் சிறந்த ஆசிரியராக,
20 வருடங்கள் சிறந்த பேராசிரியராக,
5 வருடங்கள் மிகச் சிறந்த துறைத் தலைவராக,


இன்னமும் .................
மருமகனிடமும் மருமகளிடமும் மறைத்து பேசத் தெரியாத மாமியாராக,
பேரப் பிள்ளைகளிடம் பாசத்தை மட்டுமல்ல
கண்டிப்பையும் காட்டும் ஆச்சியாக,
புத்தக ஆசிரியராக,
பொருளாதார வல்லுனராக,
தன்னை செதுக்கிக் கொண்டே
தன்னை சுற்றி உள்ளோருக்கான பாதையையும் சேர்த்தே செதுக்கும் வழிகாட்டியாக,
இவை எல்லாமுமாகவும் ,


இன்னும் பலவாகவும்


வாழ்ந்து கொண்டிருக்கும்

என் அம்மாவுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள் .....







Tuesday 13 April 2010

சொல்லாமல் ....

நான்கு வருடமாக தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் நோயாளி இவர் .எப்போதும் சிரித்த முகத்துடனும் ஒரு உற்சாகத்துடனும் இருப்பார் .போன முறை வந்த போது ரொம்பவே டல்லாக தெரிந்தார் .

கேட்ட போது ,"ஒடம்புக்கு ஒண்ணுமில்லமா ,எல்லாம் வெசனம் தான் என்று சொன்னார் ."எம்மக இஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிட்டா.கஷ்டப்பட்டு படிக்க வச்சேன் .அந்த படிப்ப முடிச்சிருந்தா கூட பரவாயில்ல .அதையும் பாதியில விட்டுட்டு ஹாஸ்டல்ல இருந்து ஓடிப்போயிட்டா . சொல்லவே இல்ல .ஸ்கூல் முடிஞ்ச ஒடனே ,ஒரு வருஷத்துல காசு சேத்துட்டு கட்டி கொடுத்திருறேன்ன்னு சொன்னேன் .இல்ல கண்டிப்பா படிப்பேன்னு சொன்னா .கடன வாங்கி சேத்து விட்டேன் .இப்படி பண்ணிட்டா .சொல்லவே இல்ல .இப்படிம்மா ன்னு சொல்லியிருந்தா கூட படிப்ப முடிச்சு கட்டிக் கொடுத்திருக்கலாம் .ஒண்ணுமே சொல்லல்ல இந்த பொண்ணு.


போலீஸ் ஸ்டேஷணுல அவங்கப்பா பொண்ணே இல்லன்னு கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டாரு .என்னையும் போடச் சொன்னாரு .எனக்கு கையெல்லாம் நடுங்குது .அவ அசங்காம அழகாக கையெழுத்து போடுறா .இதுக்கு தானாடி ஒன்னைய படிக்க வச்சேன்னு கேட்டா ,பதிலே இல்ல .எம்பக்கம் திரும்பிக் கூட பாக்கல.அந்த இன்ஸ்பெக்டர் சொல்றாரு ,ஏம்மா உங்கம்மா நிக்குறாங்க ,ஏதாவது பேசுமா ன்னு .வாயே தொறக்கல .எப்படி கடன வாங்கி நகைய செஞ்சி போட்டேன்னு சொன்னா ,ஒடனே செல்லு ,செயினு எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு நிமிந்து நிக்குறா .ஒண்ணும் சொல்லாமையே இருந்திட்டியே ன்னு கேக்குறேன் ,பதிலே சொல்லாம நிக்குறா .


என்னமோம்மா ,சாகப் போயிட்டேன் .என் சின்னப் பொண்ணு தான் ,எனக்காக இரும்மா ன்னு சொல்லி அழுதா.என்
வீட்டுக்காரு ரொம்ப குடிப்பாரு .வீடு பூரா தொரத்தி அடிப்பாரு .இந்த பிள்ளைங்களுக்காக தான் எல்லாமே பொறுத்து போறேன் .இப்படி சொல்லாமையே இருந்து மோசம் பண்ணிட்டா . காலேஜுல அவங்க அப்பாவுக்கு தெரியாம சொல்லிட்டு வந்திருக்கேன் .வந்தா சேத்துக்கோங்க .பீஸ நா கட்டுறேன்னு .படிப்பாவது மிஞ்சட்டும்."

பாவம் ,போகும்வரை அழுது கொண்டே இருந்தார் .

Wednesday 7 April 2010

தீர்வு ?

கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளையும் தன் மகனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார் ஒரு பெண் .தங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு நோய் வந்துவிட்டதே என்பதே தாங்க முடியாததாக இருந்தது அவருக்கு .அதிலும் குழந்தைக்கு நோய் வரக்கூடும் என்பதை பற்றிய சந்தேகங்கள் வேறு அவரை வதைத்துக் கொண்டிருந்தன .இது போதாதென வீட்டில் மற்றவர்களுக்கு தொற்றி விடுமோ என்ற பயம் வேறு .இதற்கு பயந்து அவர்களை தனியே வைத்தால் அவர்களை கவனிக்க முடியாது போய் விடுமோ என்ற பயம் வேறு.அவர் பதட்டமும் பார்க்கவே சங்கடமாக இருந்தது .

சரியான சிகிச்சைகள் செய்தால் குழந்தைக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவே என்று சொன்ன போதும் அந்த ஒரு சதவீதத்தில் இந்த குழந்தை வந்துவிட்டால் ?என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதனால் இந்த குழந்தை வேண்டாம் என்று கூறினார் .நாங்கள் சொன்னோம் ,அதை பற்றிய முடிவை உங்கள் மகனிடமும் மருமகளிடமும் விட்டுவிடுங்கள் .இதை பற்றி கலந்து பேசி முடிவு எடுப்பதாக சொன்னார் .

அடுத்ததாக ,இவரின் இன்னொரு பெரிய சந்தேகம் ,மாதவிடாய் காலங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பது .அந்த ரத்தப் போக்கினால் பிறருக்கு நோய் வரலாமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர் சொன்னார் ,"எப்படியும் இவங்கள என்கூட தான் வச்சுக்கப் போறேன் .ஆனா மத்தவங்களையும் நா பாதுகாக்கணும் .இந்த பொண்ணு தூரம் ஆகிறப்ப மத்தவங்களுக்கு எதவும் வந்திரக்கூடாது .இனிமே இவளுக்கு கொழந்தையும் வேண்டாம் .அவங்க ஒடம்ப அவங்க பாத்துகிட்டா போதும் .அதனால கர்ப்பபைய எடுக்க ஏற்பாடு செஞ்சு தாங்க ,"என்றார் .எல்லாவற்றையும் விளக்கி சொல்லிவிட்டு சொன்னோம் ,இருபது வயது பெண்ணுக்கு கர்ப்பப்பையை அகற்றுவது அவளை கொல்வதற்கு சமம் ,நோயின் தன்மை பற்றி நன்கு புரிந்து கொள்ளுங்கள் .திருமணம் செய்து குடித்தனம் நடத்தும் இருவருக்கு தங்கள் எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்கவும் தெரியும் என்று நம்புங்கள் ,என்று சொல்லி அனுப்பி வைத்தோம் .

இறுதி முடிவு இன்னமும் சொல்லாமல் சென்றிருக்கிறார்கள் .....காத்திருக்கிறோம்