Saturday 23 January 2010

இப்படியும் சிலர்

எச்.ஐ.வி நோய் உள்ளவர்கள் மருந்துகளை சரியாக நேரம் தவறாமல் எடுத்துக் கொள்வது அதி முக்கியமானது .சிலர் இதை பற்றி எத்தனை முறை கூறினாலும் கவனக்குறைவாக இருந்து விட்டு பின்னர் வருந்துகிறார்கள் .


இவர் ஒரு பள்ளி ஆசிரியர் .வயது நாற்பது .கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் .ஆனால் மருந்துகளை சரிவர சாப்பிடுவதில்லை .இதில் குடி பழக்கம் வேறு .எத்தனை முறை எப்படி எப்படியோ(அன்பாக ,மிரட்டி,.. ) எடுத்து சொல்லியும் பயனில்லை .ஒவ்வொரு முறையும் மிகவும் முடியாமல் போகும் போது இவரின் வயதான தந்தையும் சகோதரரும் இவரைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் .உடல்நலமான பின் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் சரியாக வருவார்.மறுபடியும் வேதாளமாக இவர் முருங்கை மரம் ஏற இவரின் வீட்டார் விக்கிரமாதித்தனைப் போல சளைக்காமல் பிடித்துக் கொண்டு வருவார்கள் .இப்படி பல முறை .

சில நாட்களுக்கு முன்னால் மீண்டும் வந்தார் ,பல மாதங்களுக்கு பின் .வழக்கம் போலவே பல தொந்தரவுகள் .
நான் :எப்படி இருக்கீங்க ?
அவர் :ரொம்ப முடியல
நான் :ஏன் வரல ?
அவர் :வர முடியல
நான் :ஒடம்பு இவ்வளவு மோசமாகற வரைக்குமா வராம இருக்கிறது
அவர் :அந்த கெழவன் காசு இல்லன்னுட்டான் .
நான் :வயசான காலத்துல அவர் எத்தன தடவ தான் உங்களுக்காக கஷ்டப்படுவாரு
அவர் :என்ன கஷ்டம் சின்ன மகன் தான் கொடுக்கிறான்ல
நான் :சரி ,மாத்திர சாப்பிட்டீங்களா ?
அவர் :அப்பப்ப சாப்பிட்டேன்
நான் :ஏன் ஒழுங்கா சாப்பிடல ?
அவர் :இந்த ஒரு தடவ காப்பாத்தி விட்டுருங்க இனிமே ஒழுங்கா சாப்பிடுறேன் .
நான் :ஒரொரு தடவையும் இப்படித்தான சொல்றீங்க .
அவர் :இந்த தடவ அப்படியில்ல ,நா ஒழுங்கா சாப்பிடாம வந்தா என்ன உங்க செருப்பால அடிங்க

இப்படியாகவே ஒவ்வொரு முறையும் எங்களின் உரையாடல் இருக்கும் .
இந்த முறையும் முடிந்தவற்றை செய்து அனுப்பியிருக்கிறோம் .


Wednesday 20 January 2010

பரிசுகள்

சென்ற வருடத்தில் சிகிச்சைக்கு வந்தவர்கள் எனக்கென கொண்டு வந்த இந்த பரிசுப் பொருட்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் .

1 .சப்போட்டா பழங்கள்
(ஒரு சப்போட்டா தோட்டத்தில் கூலி வேலை செய்பவர் கொண்டு வந்தது )
2.மாம்பழங்கள்
3.மாங்காய் ஏராளமாக
4.எலுமிச்சம்பழம்
5.முருங்கைக்காய்
6.ஏராளமாக திருப்பதி லட்டு (எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்கள் நிறைய பேர் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள் )
7.ரவா லட்டு ,எள்ளுருண்டை ,சோமாசி (இவையெல்லாம் ஒருத்தரே தன் வீட்டில் இருந்து செய்து கொண்டு வந்தவை .இதோடு ஒவ்வொரு முறையும் ஒரு அரை கிலோ புளியோதரையும் கட்டிக் கொண்டு வருவார் .சுவை அபாரமாக இருக்கும் )
8.பனங்கிழங்கு -வேக வைத்தது
9.ஆப்பிள் பழங்கள்
10 .இனிப்புகள் ஏராளமாக
11.வேர்க்கடலை
12 .கீ செயின்
13 .நெய்
14 .முந்திரி

என்ன தவம் செய்தனை ...............?

Tuesday 19 January 2010

கலைவாணர்.காம்







கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ;இவரை எனக்கு அறிமுகம் செய்தவர் என் தந்தை .இவரை பற்றியும் இவரின் நகைச்சுவை பற்றியும் அவர் வாழ்வில் கரும்புள்ளியாகிப் போன லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை பற்றியும் அப்பா சிலாகித்து பேசியதில் நான் இவர் ரசிகையானேன் .

சென்ற வருடம் இவரின் நூற்றாண்டு .சமகால தலைவர்களையும் தோள் தந்த நண்பர்களையும் கட்சிக்கென பாடுபட்ட பலரையும் மறந்து போன இந்த காலகட்டத்தில் இவரின் நூற்றாண்டும் கடந்து போனது .பெண்ணுரிமை ,பொதுவுடைமை என பல கருத்துகளை நகைச்சுவையாக சொல்லி விளங்க வைத்து ,கொடுத்தே நலிந்து போன இந்த மாபெரும் கலைஞரின் நூற்றாண்டும் முன் எத்தனையோ பேருடையதைப் போல பெரிய ஆரவாரமின்றி கடந்து போனது .

இன்று எம்.ஜி.ஆர் ரூப்குமார் அவர்களின் ஒரு வலைப்பூவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் கலைவாணரைப் பற்றிய வலைப்பக்கத்திற்கான தொடுப்பு ஒன்று இருந்தது .மிகச் சிறப்பாக சிரத்தையுடன் அமைக்கப்பட்டிருந்த அந்த பக்கங்களில் கலைவாணரின் வாழ்க்கை குறிப்புகள் ,அவரை பற்றிய செய்திகள் ,அவரை பற்றிய கருத்துகள் ,பல புகைப்படங்கள் ,அவரின் சில பாடல் காட்சிகள் என்று வலையேற்றியிருக்கிறார்கள் . ஆங்கிலத்தில் இருக்கும் இந்த பக்கம் விரைவில் தமிழிலும் வரும் என முகப்பு பக்கம் சொல்கிறது .

தொய்வின்றி செயல்பட்டால்
கால சுழலில் புகழுடன் இருந்தும் பெயர் மறைந்து போன பல கலைஞர்கள் போல் அல்லாமல் கலைவாணரின் புகழை ஆவணப்படுத்த அவரின் நூற்றாண்டின் நினைவாக துவங்கப்பட்டிருக்கும் இந்த வலைப்பக்கம் ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்று நம்புகிறேன் .

http://kalaivanar.com/

Saturday 16 January 2010

பாட்டி

என் அப்பா பெயர் ஊரில் சொள்ளமுத்து என்றே பரவலாக அறியப்படுகிறது .ஊருக்குள் அதிகம் புழக்கத்தில் இருக்கும் பெயர் கூட .
அந்த நாட்களிலேயே என் தாத்தா அதை நவீனப்படுத்தி செல்வமுத்து என்று வைத்ததாக சொல்வார்கள் ."அவுக அய்யா சொள்ளமுத்த அப்படி ஸ்டைலா மாத்தி விட்டாக "என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் .

பாட்டியின் பெயர் பத்திரக்காளி .இது ஊர் அம்மனின் பேர்.ஆலடிப்பட்டியில் கூட இந்த பெயர் அத்தனை பரவலாக வைக்கப்பட்டதாக தெரியவில்லை .எனக்கு பாட்டியின் பெயரை சுருக்கி பத்ரா என்று வைக்க வேண்டும் என்று சொன்னதாக அம்மா சொல்வார்கள் . வைத்தால் பத்திரக்காளி என்று முழு பெயராக தான் வைக்க வேண்டும் என்று அப்பா சொல்லி விட்டதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டதாம்.

ஒருமுறை பாட்டி சென்னையில் இருந்த போது காய்ச்சல் வந்துவிட டாக்டரிடம் அழைத்து சென்றாராம் என் பெரிய அத்தை .பரிசோதனை எல்லாம் முடிந்து மருந்து எழுதும் முன் ,"உங்க பேர் சொல்லுங்கம்மா "என்று டாக்டர் கேட்கவும் "பத்திரக்காளி" என்று என் அத்தை சொல்ல வாயெடுக்கும் முன் ,"பத்மாவதி "என்றாராம் பாட்டி சட்டென்று .