Monday 28 December 2009

விருதும் இல்லாமல் விழாவும் இல்லாமல்


காலையில கண் முழிச்சா
நா "கண் திறக்கும் கதிரவன்" தான்
பேஸ்ட கொஞ்சம் பிதுக்கையில
நா "பல் துலக்கும் பகலவன்" தான்

குளிச்சிட்டு வரும் போது
நா "அழுக்ககற்றும் ஆதவன் "தான்
சாப்பிடும் போதும் கூட
"உண்டு செரிக்கும் உத்தமன் " நான்

நொடிக்கு தான் ஒண்ணாக
நூறு கோடி பட்டமுண்டு
கண்ஜாடை செஞ்சுபுட்டா
விழா எடுக்க கூட்டமுண்டு

நேத்து சொன்ன வாழ்த்தெல்லாம்
நடுச்சாமம் கரைஞ்சிருச்சி
உச்சி மண்ட குளுந்ததெல்லாம்
தல சீவ உதிந்திருச்சி

இன்னைக்கி பொழுது இப்ப
சொகமில்லா பொழப்பாச்சி
காது குளிர நாலு சொல்லு
கேக்காத பொழுதாச்சி

அய்யான்னு சொல்லுவாங்க
அய்யன்ன்னு சொல்லுவாங்க
மெத்த படிச்சவுங்க
மெருகாத்தான் சொல்லுவாங்க

அதிசயப் பேச்செல்லாம்
அசராம சொல்லுவாங்க
புதுசு புதுசாத்தான்
படிச்சு வந்து சொல்லுவாங்க

இத்தனையும் இல்லாம
ராப்பொழுது கழியாது
இந்த பாட்டு கேக்காம
சோறு கூட செமிக்காது

நாளைக்கி பொழுது வந்தா
கோடி ஜனம் கூடி வரும்
ஆரவாரம் கோஷமெல்லாம்
வானம் முட்ட கேட்டு வரும்

ஆனாலும் அது வரைக்கும்
காத்திருக்க தெம்பு இல்ல
நல்ல வார்த்த கேக்காம
துண்டுக்குள்ள உசிரு இல்ல

மனசு மாய்ஞ்சு போகுமுன்னே
புத்துசிரு பாச்சிடுங்க
நேத்து எடுத்த படத்த கொஞ்சம்
டிவியில போட்டுடுங்க

Tuesday 22 December 2009

கைராசி

"அந்த டாக்டர் கை பட்டவுடனே எனக்கு சரியாயிடும் ","அந்த ஆஸ்பத்திரியில கால் மிதிச்சவுடனே என் கொழந்த சுகமாயிரும் "மருத்துவர்களை பெரிதும் ஆட்டி வைக்கும் கைராசி குறித்த கருத்துகள் இவை .


இங்கே குடும்ப மருத்துவர் என்று எடுத்துக் கொண்டால் அவரின் வெற்றியை தீர்மானிப்பது பெரும்பாலும் அவரின் கைராசி தான் . மருத்துவ கல்லூரியில் சுமாராக படித்தவர்கள் பலர் நடைமுறையில் பெரிய வெற்றி பெறுவதும் ,மெத்தப் படித்து பதக்கம் வாங்கியவர்கள் சுமாரான வெற்றி பெறுவதும் இதனால் பல நேரம் நடக்கிறது .


ஒரு மருத்துவர் மேல் அவரிடம் சிகிச்சைக்கு வருபவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது இந்த கைராசி என்னும் செண்டிமெண்ட் .ஒருவேளை,ஆதரவாக பேசிப் பழகும் மருத்துவர்களை கைராசி நிறைந்தவர்களாக மக்கள் நினைக்கிறார்களோ என்று நினைத்தால் எனக்கு தெரிந்த ஒரு பிரபல ராசியான மருத்துவர் "ம்","சரி " என்ற இரு சொற்களை (?) மட்டுமே அதிகமாக பயன்படுத்தக் கூடியவர்.ஒருவேளை ,நிறைய பட்டங்கள் வாங்குவதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்று பார்த்தால் ,பட்டம் எதுவுமே வாங்காத ஆர்.எம்.பி டாக்டர்களுக்கு பிராக்டிஸ் அள்ளிக் கொண்டு போகிறது .மருத்துவரின் புறத் தோற்றம் இதற்கு காரணமாக இருக்குமோ என்று யோசித்தால் அதுவும் ஒரு சரியான காரணமாக தெரியவில்லை .


ஒருவேளை நிஜமாகவே இதில் ஏதும் ராசி இருக்கிறதோ என்று பார்த்தால் ,சிலருக்கு ராசியாக இருக்கும் மருத்துவர் வேறு சிலருக்கு ராசியற்றவராக இருக்கிறார் .இது குறிப்பாக மகப்பேறு நல மருத்துவர்களுக்கு அதிகம் பொருந்தும் .ஒரு ,குடும்பத்திற்கு அந்த மருத்துவரிடம் சென்றால் கண்டிப்பாக சுகப்பிரசவம் ஆகும் இல்லை தாங்கள் நினைக்கும் (பல நேரங்களில் ஆண் குழந்தை ) குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் .இன்னொரு குடும்பம் (அதே மருத்துவருக்கு அடுத்த வீட்டில் இருந்தால் கூட ) அங்கே போனால் கண்டிப்பாக சிசேரியன் தான் என்று சொல்லி அந்த பக்கமே போக மாட்டார்கள் .


பிறர் சொல்லக் கேட்டு இந்த கைராசி என்பது வாய்வழி செய்தியாகப் பரவி ஒரு மருத்துவரின் வெற்றியை நிர்ணயம் செய்கிறது .இதன் காரணமாக ஒரு மருத்துவர் கைராசியானவராக அறியப்படுவது அவசியமாகிறது .ஆனால் இதை சாத்தியமாக்குவதோ பெரிய மந்திர வித்தையாக இருக்கிறது .சிலருக்கு எந்த முயற்சியும் இல்லாமலே நிறைவேறுகிறது சிலருக்கு எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் வெறும் கனவாகவே இருந்து போகிறது


எது எப்படியோ, பக்தர்களுக்கு கடவுள் மேல் இருக்கும் பக்தி போல, இப்படி ஒரு நம்பிக்கை பற்றுதலோடு இந்த வர்த்தக யுகத்திலேயும் மக்கள் மருத்துவர்களை மதிக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான் .

Saturday 19 December 2009

பார்பக்யூ நேஷன்

என் மகனோட பிறந்தநாள் ஏழாம் தேதி .வெளிய சாப்பிடலாம்ன்னு பார்பக்யூ நேஷன்ங்கற ஒரு இடத்துக்கு போனோம் .இது டி நகர் ,உஸ்மான் ரோடு ஜாய் ஆலுக்காஸ் முருகன் இட்லி கடை இரண்டுக்கு நடுவில ஒரு சந்துல இருக்கு .
முதலே டேபிள் முன்பதிவு செஞ்சுகிட்டு தான் போனோம் .

உள்ளே பெரிய வித்தியாசமா எதுவும் செய்யலைன்னா கூட நல்லா இருந்தது .சீட்டிங் ரொம்ப வசதியா இருந்தது .கொஞ்ச நெருக்கத்தில போட்டிருந்தாக் கூட கச்சடாவா இல்லாம போட்டிருந்தாங்க .

முக்கியமான விஷயம் என்னன்னா ,சாப்பாடு புஃபே முறையில் .ஒருத்தருக்கு 450ரூ .முதலா ஸ்டார்டர்ஸ் தராங்க .இதுக்கு அழகா நம்ம டேபிளேயே ஒரு சின்ன கிரில் வச்சிருக்காங்க .வெஜ் ( உருளைக் கிழங்கு ,காளான் ,கொடை மிளகாய் ) ,அப்புறம் நான் வெஜ் (சிக்கன் ,இறால் ) .இந்த ஐட்டங்கள் காலியாக ஆககொண்டு வந்து வச்சுக்கிட்டே இருக்காங்க .இது தவிர கபாப் ,குழந்தைகளுக்கு ஸ்மைலீஸ் இன்னும் வேற விஷயங்களும் வந்து செர்வ் பண்ணாங்க .டேபிள் மேல ஒரு கொடி வச்சிருக்காங்க .அத நீங்க மடக்கி விடுற வரைக்கும் இப்படி செர்வ் பண்ணுவாங்களாம் .

இதுக்கப்புறம் வழக்கமான புஃபே .ஆனாலும் நிறைய வெரைட்டி இருந்தது .குறிப்பா ஐஸ் கிரீம் ,சீஸ் கேக் எல்லாமே நல்லா இருந்தது .ரொம்ப அருமையா செர்வ் பண்ணினாங்க .உடனே உடனே கேக்கறதுக்கு முன்னாலேயே எல்லாமே கொண்டு வந்தாங்க .சாப்பாடும் ரொம்ப சுவையா இருந்தது .நிதானமா திகட்ட திகட்ட சாப்பிட்டோம் .

http://www.barbeque-nation.com/

Wednesday 16 December 2009

தாய்க்கு தலைமகன்

இந்த பெண்மணி எங்களிடம் சிகிச்சைக்கு வந்த போது வெளியில் பல தவறான சிகிச்சைகள் செய்யப்பட்டு உடல்நலம் சற்று கவலைக்கிடமாக இருந்தது.சரியான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நன்கு தேறியது.இப்போது கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக இங்கு தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார் .இவருக்கு வயது நாற்பத்து ஐந்து இருக்கும் .

எப்போதும் இவரை அழைத்து வருவது இவரின் மகன் .வயது பதினெட்டிலிருந்து இருபதிற்குள் தான் இருக்கும் .ஆனால் அவன் தன் அம்மாவை பார்த்துக் கொள்ளும் விதம் அலாதியானது .ஒவ்வொரு முறை வரும்போதும் ,"எங்கம்மா நல்லா இருக்காங்களா ?"என்று ஒரு நூறு முறையாவது கேட்டுக் கொள்வான் ."வேற ஏதாவது டெஸ்ட் செய்யனும்ன்னா யோசிக்காதீங்க டாக்டர் ,கண்டிப்பா செய்திருங்க "இதை ஒரு ஐம்பது முறை ."வெயிட் கூடியிருக்காங்களா ? ரிப்போர்ட் எல்லாம் நல்லா இருக்கா?" என்று இவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருப்பான் .

எல்லா சோதனைகளும் முடிந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பும் முன்னர் கண்டிப்பாக ஒரு முறை என் அறையின் உள்ளே வந்து ,"நிச்சயமா ,எங்கம்மா நல்லா இருக்காங்கல்ல ,"என்று உறுதி செய்து கொண்ட பின்னரே கிளம்புவான் .இத்தனையையும் மெல்லிய ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருப்பார் அவன் அம்மா .

Saturday 12 December 2009

செருப்"பூ"

ஊருக்கு போயிருந்த போது தோட்டத்திற்கு சென்றிருந்தோம் . அப்பா ,அம்மா ,பத்தி பெரியம்மா ,நாகூர் மாமா (அப்பாவின் மாமா மகன் ). இந்த தோட்டத்தில் தான் என் தாத்தா ,பாட்டி ,அத்தை ,பெரியப்பா ஆகியோரின் கல்லறைகள் இருக்கின்றன .மற்ற இடங்களில் ஏதோ பயிரிடப்பட்டிருந்தது .கல்லறைகள் இருந்த இடத்தை சுற்றி மட்டும் செம்பருத்தி ,அரளி என்று பூக்கள் பூத்து சின்ன அளவில் என்றாலும் அழகிய பூந்தோட்டமாக இருந்தது .

இதை நான் பார்த்துக் கொண்டிருக்கையில் என் கண்ணை பறித்தது அரளி செடியில் பூத்திருந்த ஒரு செருப்"பூ".ஒரு நீல நிற ஹவாய் செருப்பு ஒன்று துளையிடப்பட்டு கட்டி தொங்க விடப்பட்டிருந்தது .இது ஏதும் பறவைகளை விரட்ட தொங்க விட்டிருக்கிறார்களோ என்று நான் கேட்டுக் கொண்டிருக்கும் போதே , மாமா சொன்னார் ,"அழகா பூத்தோட்டம் போட்டிருக்காகள்லா அதனால ,கண்ணு பட்ரும்ன்னு இப்பிடி செருப்பக் கட்டி தொங்கவிட்டிருக்காங்க .மத்தபடி காக்காவுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தம் கூட இல்ல ."

Thursday 3 December 2009

எப்பொழுதும் எனதே


எப்பொழுதும் எனதே
இந்நாள் துவக்கிய ஒளியின் காலம் .
இனி விடுமுறைகள் இல்லை
பருவங்களின் நேர் சுழற்சி போலும்
கதிரவனின் சுழற்சி போலும்
என்றும் பிறழாமல் ...


பழையதே கருணை
புதியவர் குடிகளே
பழையதே தான் கிழக்கும்
அவனது ஊதா நிரல்கள் மேல் மட்டும்
ஒவ்வொரு உதயமும் , என்றும் முதலாய்


Always Mine!
By Emily Dickinson

Always Mine!No more vacation !
Term of Light this Day begun!
Failless as the fair rotation
Of the Seasons and the sun

Old the Grace, but new the Subjects—
Old, indeed, the East,
Yet upon His Purple Programme
Every Dawn, is first