Tuesday 19 May 2009

போர் முடிந்தது ?

இலங்கை, போர் முடிந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது .இனியாவது அங்கு சீரமைப்பு முயற்சிகள் துவங்கப்படும் என்று நம்புவோம் .

இதனிடையே விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் ,பிரபாகரன் உட்பட, கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது .இதற்கு ஆதாரங்கள் ஏதும் அளிக்கப்படாத நிலையில் இது எத்தனை தூரம் உண்மை என்றும் தெரியவில்லை .இத்தகைய குழப்பத்தை விளைவிப்பதே இந்த செய்திகளின் நோக்கம் போலும் .

இலங்கை அரசுக்கு மேலாக, இங்குள்ள பல ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் ,தப்பியோடும் போது மரணம் என்ற கேலிப் பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கின்றன .இன்று என்.டி.டி.வி ,"இலங்கையின் மிகப் பெரிய தீவிரவாதி மரணம் "என்று செய்தி வெளியிடுகிறது .இவர்களுக்கு இதில் என்ன இத்தனை கொக்கரிப்பு என்று புரியவில்லை .


ராஜீவ் காந்தியின் கொலையை மட்டுமே முன்னிறுத்தி ,விடுதலை புலிகள் அமைப்பின் அடையாளமே அதுதான் என்பது போல செய்திகள் பூசப்படுகின்றன .
இந்த போராட்டத்தின் ஆரம்பம் ,ஏன் போராடினார்கள் ,ஏன் ஆயுதம் எடுத்தார்கள் போன்ற கேள்விகளை கேட்டுப் பார்த்தால் அரசின் சலுகைகள் குறையும் இல்லை ரேட்டிங்குகள் குறையும் என்று அஞ்சுகிறார்களோ என்னமோ ?

பிரபாகரன் இறந்து விட்டாலே அமைதி திரும்பி விடும் என்ற கூற்று சரியா ?
நேற்று பி பி சி யில் ஒரு கேள்விக்கு இலங்கை அரசு சார்ந்த ஒருவர் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவதில்லை என்பதையே ஏற்க மறுத்தார் .இந்நிலையில் ,இவர்கள் எல்லா அதிகாரங்களையும் பகிர்ந்து அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எழ மறுக்கிறது .இதை சரியாக செய்திருந்தால் இந்த போராட்டமே நீர்த்துப் போயிருக்காதா ?

முன்பு பாலஸ்தீன போராட்டத்தில் யாசர் அராபாத் மீது இப்படியே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன .அவரில்லையெனில் அங்கு அமைதி திரும்பும் என்பது போல செய்திகள் பரப்பப்பட்டன .ஆனால் அவரில்லாத பாலஸ்தீனம் இன்று எப்படியிருக்கிறது ?


அராபாத் இறந்த போது ஒரு செய்தியாளர் சொன்னார் ,"அவரிடம் குறைகளே இல்லை என்று சொல்லமுடியாது ,ஆனாலும் பாலஸ்தீன பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு வந்ததில் மட்டுமல்ல ,அதை அங்கு நிரந்தர இடம் பெற செய்ததிலும் அவர் ஆற்றிய பங்கு சிறப்பானது .அவர் இல்லாமல் இருந்திருந்தால் பாலஸ்தீனமும் அங்கு மக்களுக்கு இழைக்கப்படும் அவலமும் உலக பார்வைக்கு வராமலேயே அழிந்திருக்கும் ,"என்று .


அது மட்டுமல்ல ,தினம் மிதிக்கப்படும் ஒரு இனத்தின் உணர்வுகள் உணர்த்தப்படாமல் ஓய்ந்திருக்கும் .


No comments: