Friday 2 January 2009

ஆடல் காணீரோ

இந்த வருடமும் சென்ற வருடம் போலவே அம்மா ,"கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் "நடத்தும் மார்கழி விழாவிற்கு சென்று வந்தார்கள் .இதில் நேற்று மயிலை ,வித்யா மந்திர் பள்ளியில் நடந்த ,"ஆடல் காணீரோ -எம்.எல்.விக்கு ஒரு நாட்டிய அஞ்சலி" என்ற நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன் .இதற்கான எண்ணமும் ஆக்கமும் நடனமும் திருமதி .ராதிகா சுரஜீத்தினுடையது .


கானக்குயில் .திருமதி .எம்.எல்.வியின் திரை இசைப் பாடல்கள் ,அவர் தன் கச்சேரிகள் மூலம் பிரபலப்படுத்திய பாடல்கள் என பாடல்களை தெரிவு செய்திருந்தார்கள் .இதனூடே அவருடைய சீடர்கள் ,அவருடன் பணியாற்றியவர்கள் என சிலர் அவருடனான தங்கள் அனுபவங்கள் ,அவரின் குண நலன்கள் ,அவரின் இசையின் சிறப்புகள் என பகிர்ந்து கொண்டதன் பதிவையும் ஒளிபரப்பினார்கள் .


முதல் பாடலாக ,இறை வணக்கம் .இதில் எம் .எல்.வி . அவர்களே பாடிய "கஜானனம்" பாடல் திரையில் காண்பிக்கப் பட்டது .பின்னர் இரண்டு பாடல்கள் ,ஒரு திரைக்காட்சி என நிகழ்ச்சி நடந்தது .ஆடல் காணீரோ ,கொஞ்சும் புறாவே ,நந்தகோபாலனுடன் நான் ஆடுவேன் ,முருகன் பாடல்கள் என்று பல பாடல்களுக்கு திருமதி .ராதிகாவின் குழுவினர் ஆடினார்கள் .
ஆச்சரியமாக ,"அய்யா சாமி "பாடலும் கூட இடம் பெற்றிருந்தது .


பாடல் தெரிவு ,நடனக் குழுவினர் தேர்வு, நடன அமைப்பு ,உடைகள் ,பேட்டிகளின் தொகுப்பு ,பல அரிய புகைப்படங்களின் தொகுப்பு என்று அனைத்து விஷயங்களிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்தது .கருத்தூன்றி ரசித்துப் பார்த்தேன் என்று சொன்னால் அது மிகையில்லை .அத்தனை அற்புதமாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது .எம்.எல்.விக்கு தக்கதொரு அஞ்சலியாக இது அமைந்தது என்பதில் ஐயமில்லை .எம்.எல்.வியின் ஆன்மா எங்கிருந்தாலும் இவர்களை வாழ்த்தியிருக்கும் .


No comments: