Tuesday 6 May 2008

ஆலடிப்பட்டி

இன்று என் தாத்தாவின் நினைவு நாள் .இந்நாளில் பல வருடங்கள் என் அப்பா விரதம் இருந்ததை நான் அறிந்ததுண்டு .என் தாத்தா பலவருட தவத்திற்கு பின்னால் தன் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தவர் . பூசாரிக் குடும்பத்தில் பிறந்ததால் 'வைத்தியலிங்கப் பூசாரி' என அழைக்கப் பெற்றவர் . இவர் படிப்பிற்கு ஐந்தாம் வகுப்பு மேல் அடுத்த ஊர் விடுதியில் இருக்க வேண்டியதிருந்ததால் ,அவர் அம்மா மகனை பிரிய முடியாது என்று முடிவெடுத்தார் .இதனால் என் தாத்தா ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த மேதை ஆனார் .
பலசரக்கு கடை ஒன்றை எங்கள் ஊரில் நடத்தி வந்த இவர் ,கம்பராமாயண கதை கூறியே வியாபாரம் செய்வார் என்று சொல்வார்கள் .கல்வியை விட உயர்ந்த செல்வம் எதுவுமில்லை என்பதை நன்குணர்ந்தவர் இவர் .இதே ராமாயணத்தில் பல்லாயிரம் பாடல்கள் இவருக்கு மனப்பாடமாகத் தெரியுமாம் .
அய்யா என்று தன் பிள்ளைகளால் பாசத்துடன்னும் வாஞ்சையுடனும் அழைக்கப் பட்டவர் . என் தாத்தாவின் கல்லறை எங்கள் ஊர் தோட்டத்தில் இன்றும் இருக்கிறது .

என் தாத்தாவைக் குறிப்பதாக கம்பராமாயணத்தில் இருந்து என் தந்தை குறிப்பிடும் பாடல் இது

"நந்தா விளக்கனைய நாயகனே- நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயாநிலையே
எந்தாய் !இகல் வேந்தர் ஏரே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு யார் உளரே மற்று "

Friday 2 May 2008

ஆலடிப்பட்டி



என் சிறு வயதில் கோடை விடுமுறையில் திருநெல்வேலியிலிருந்த என் தாத்தா வீட்டிலிருந்து ஆலடிப் பட்டிக்கு நான் வருவது வழக்கம் .ஒரே ஒரு விடுமுறை காலத்தில் இரவு முழுவதும் பல பேர் சேர்ந்து உட்கார்ந்து பருத்தி காய்களிருந்து பருத்தியை பிரித்து எடுத்தது நினைவிருக்கிறது .
ஆலடிப் பட்டியை நினைத்த உடன் என் நினைவுக்கு வருபவை என் பாட்டி வீடு,பாட்டியின் அஞ்சறைப் பெட்டி ,பாட்டியின் தோட்டம் ,அதிலிருக்கும் தாத்தாவின் கல்லறை (மே ஆறாம் தேதி என் தாத்தாவின் நினைவு நாள் ) ,பாட்டி வீட்டு மச்சிக்கு செல்லும் மர ஏணி மற்றும் திருநெல்வேலியில் இல்லாத இங்கு இருந்த கழிப்பறை .
இந்த ஊரைப் பொருத்த வரை கிட்டத் தட்ட எல்லா வீடுகளும் ஒரே அமைப்பில் இருக்கும் .