Tuesday 12 June 2012

நதிக்கரையில்



இரவில் ,
சில நிலாக்கள் கொய்து
நகைக்கிறது நதி.

நிலாக்களை தேடி
நதியில் குதிக்கின்றன
விண்மீன்கள் .

விண்மீன்களை
ஒளித்தும் மறைத்தும்
விளையாடுகிறது நதி.

வானம் நீந்திகிடக்கிறது
நதியில்
எப்பொழுதும் .


விளையாட்டாய் மேனி நனைத்து சிறுவர்கள் 
அலசி செல்கிறார்கள் நதியில்
தத்தம் சிரிப்புகளை


சிரிப்புகளை   
சிதறவிட்டு
கலகலவென சிரிக்கிறது நதி .


காதலர்கள் ,
களவும் ஊடலும்
கரைத்து  நடக்கிறார்கள்  நதிக்கரையில்


அவர்கள் ரகசியம் உணர்ந்து
காலோரமாய்
கிசுகிசுக்கிறது நதி .


களைந்த இளமையை
சிலர் துழாவி ரசிக்கிறார்கள்  மணலில்.
பொக்கை  வாய்  திறந்து
பரிகாசம் செய்கிறது  நதி


நிழலும் நிஜமுமாக
வெவ்வேறு முகங்கள்  காட்டி
காலம் கடக்கிறது 
நதிக்கரையில்


எனினும்
சலனமின்றி
நதி ஓடிக் கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு துளியும் புதுத்துளியாக....